டெல்லி:மேக்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான அவசர வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து மருத்துவமனையில் விநியோகிக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல பாதுகாப்பான வழிகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் எனக் கூறியுள்ளது.
அரசு ஏன் யதார்த்தை புரிந்துகொள்ளவில்லை? கள நிலவரத்தை ஏன் அரசு மறுக்கிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், எதையாவது செய்யுங்கள், பிச்சை எடுங்கள் ஆக்சிஜன் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் கெஞ்சுங்கள், மக்கள் செத்துக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கமுடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இது உணர்ச்சிகரமான சூழல் எனத் தெரிவித்துள்ளது. மேலும், எஃகு தொழிற்சாலை, பெட்ரோலியம் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தொழில்நிறுவனங்கள் மருத்துவப் பயன்பாட்டுக்கு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.