டெல்லி:டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த பண மோசடி வழக்கில், சுகேஷ் சந்திரசேகருக்கு உடந்தையாக இருந்ததாக, அவரது மனைவி லீனா மரியாவும் கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுகேஷ் சந்திரசேகர், லீனா மரியா இருவரும் தொழிலதிபர்களின் மனைவிகளிடம் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், 200 கோடி பண மோசடி வழக்கில் ஜாமீன் கோரி, சுகேஷ் சந்திரசேகரின் மனைவி லீனா மரியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (ஜூலை 11) நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லீனா மரியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கமலேஷ் கோத்தாரி, மோகன்ராஜ் ஆகியோரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.