டெல்லி: மாநிலத்தில் நிலவும் பிராணவாயு தட்டுப்பாடு குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், “அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 பிராணவாயு ஆலைகளை அமைக்க உள்ளோம். இவற்றில் 8 மத்திய அரசால் நிறுவப்படுகின்றன. மீதமுள்ள 36 டெல்லி அரசால் நிறுவப்படும்.
டெல்லியில் பிராணவாயு தட்டுப்பாட்டைப் போக்க, உடனடியாக அதனைப் பயன்படுத்தும் வகையில் 21 கருவிகளை ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய உள்ளோம்.
செயற்கைச் சுவாசம் தேவை இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் அந்தக் கருவிகள் நிறுவப்படும். அதேபோன்று பாங்காக்கிலிருந்து 18 பிராணவாயு டேங்கர்களை இறக்குமதி செய்ய முடிவுசெய்துள்ளோம். அதனைக் கொண்டுவருவதற்கு விமான படை விமானங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கைவைத்துள்ளோம்.
கடந்த 4-5 நாள்களில் நாட்டின் பல தொழிலதிபர்களுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். மிகப்பெரிய உதவிகள் கிடைத்துவருகின்றன. பலரிடமிருந்து சலுகைகளைப் பெற்றுள்ளோம். டெல்லி அரசுக்கு உதவி செய்யும் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
டெல்லியில் கிட்டத்தட்ட அனைத்து அவசர சிகிச்சைப் படுக்கைகளும் இப்போது நிரம்பிவிட்டன. ஜிடிபி மருத்துவமனை, பிரதான ராம்லீலா மைதானத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனையில் தலா 500 அவசரகால சிகிச்சை படுக்கைகள், முறையே ராதா சோமி வளாகத்தில் 200 படுக்கைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
எனவே, மே 10ஆம் தேதிக்குள் சுமார் 1200 முறையான அவசரகால சிகிச்சைப் படுக்கைகள் தயாராக இருக்கும்” என்று அதில் கூறியிருந்தார்.