டெல்லியில் பனிக்காலம், வைக்கோல் எரிப்பு போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி காற்று மாசுபாடு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது.
டெல்லி காற்று மாசுபாடு
முன்னதாக தடையை மீறி டெல்லியில் இந்த ஆண்டு பலரும் பட்டாசு வெடித்ததை அடுத்து கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி காற்று மாசுபாடு அதிகரித்து தலைநகர் டெல்லி திணறி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் பல்வேறுப் பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக உள்ளதாக காற்று தரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்திருந்தது.
மேலும், காற்று மாசைக் குறைக்கும் வகையில் அலுவலகத்துக்கு செல்வோர் மாதம் ஒருநாளாவது சைக்கிளில் செல்ல வேண்டும் என முன்னதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிஸோடியா கோரிக்கை விடுத்திருந்தார்.
அறிவிக்கப்பட்ட ஊரடங்கு
இந்நிலையில், தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருவதை அடுத்து, இன்று (நவ.14) தொடங்கி ஒரு வார கால ஊரடங்கை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (நவ.13) அறிவித்தார். இந்நிலையில், டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "டெல்லியில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த எங்கள் அறிக்கையை நாங்கள் நாளை (நவ.15) உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப் போகிறோம், அதன் முடிவின்படி பணியாற்றுவோம்” என்றார்.