டெல்லி:மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால்தான் முக்கிய குற்றவாளி என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், மனிஷ் சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிசோடியா, "உங்கள் சோதனைகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன, முறைகேடாக ஒரு பைசா கூட பறிமுதல் செய்யப்படவில்லை. இப்போது மனிஷ் சிசோடியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டிருக்கிறீர்கள். இது என்ன நாடகம் மோடிஜி? உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? நான் டெல்லியில்தான் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறேன், நான் எங்கு வர வேண்டும் என்று சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.