டெல்லி:இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை கைது செய்யக்கோரியும் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட ஏராளமான மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிஜ் பூஷனை கைது செய்வதோடு மட்டுமல்லாமல், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்தும் பிரிஜ் பூஷனை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி செல்ல முயற்சித்த மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசார் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, மல்யுத்த வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கங்கையில் வீசவும் முயற்சி செய்தனர்.
அதன் பிறகு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், பிரிஜ் பூஷன் மீதான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதையடுத்து, கடந்த ஜூன் 15ஆம் தேதி டெல்லி போலீசார் ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.