டெல்லி: பிரபல ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேலையின் பல ஆவணப்படங்கள் பாலியல் மற்றும் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து வந்துள்ளன. அவரின் முக்கிய ஆவணப் படங்களான ‘மாடத்தி’, ‘செங்கல்’ ஆகிய படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டவை. மேலும் இவர் ஈழப்போராட்டங்கள் குறித்தும் சில ஆவணப்படங்களை பதிவு செய்துள்ளார்.
லீனா மணிமேகலை சில மாதங்களுக்கு முன், வெளியிட்ட 'காளி' என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலானது. அந்த போஸ்டரில், காளி போன்று வேடமணிந்த பெண் வாயில் சிகரெட்டுடனும், கையில் LGBTQ+ கொடியான வானவில் நிறக்கொடியுடனும் நிற்பதுபோன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இது, இந்து மதக் கடவுளை அவமதிப்பதாகக் கூறி பெரும் சர்ச்சை எழுந்தது.
தொடர்ந்து, 'arrest leena manimekalai' என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டு சிலர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில், அவர் மீது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில், வழக்கறிஞர் ராஜ் கௌரவ் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்து தெய்வத்தை தவறாக சித்தரித்த ஆவணப்படத் தயாரிப்பாளருக்கு நிரந்தர மற்றும் கட்டாயத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.