டெல்லி:கடந்த 2022ஆம் ஆண்டு டெல்லி கலால் கொள்கை ரத்து செய்யப்பட்ட நிலையில், அப்போது டெல்லி கலால் துறை அமைச்சராகவும், அம்மாநில துணை முதலமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியா கலால் கொள்கையில் ஊழல் புரிந்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி, மத்திய புலனாய்வு முகமை (CBI), மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதனையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரு அமைப்புகளும் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 28 அன்று, அவர் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், மணீஷ் சிசோடியாவின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதனால், கடந்த ஜூலை 31 அன்று தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஏனென்றால், மணீஷ் சிசோடியாவின் வீட்டுச் செலவுகள், மருத்துவச் செலவுகள் மற்றும் அவரது தாயின் செலவுகளுக்காக பணம் தேவைப்படுவதாக காரணம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று மணீஷ் சிசோடியாவின் மூத்த வழக்கறிஞர் மனு சிங்வி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை செப்டம்பர் 4 அன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.