டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை (ஜூன். 1) சந்திக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்ட விவகாரத்தில் ஆதரவு கோர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்த நிலையில் அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரிகளை நியமனம் மற்றும் பணி மாற்றம் குறித்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு மாநில அரசின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது என்றும் அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் கூறி தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், டெல்லியில் அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.