டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், நேற்றைய முன்தினம் (அக் 21) டெல்லியில் தனது கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் போசுகையில், "எனது தொகுதி மக்களும், ஆம் ஆத்மி தொண்டர்களும் எந்த அரசியல் பின்னணியில் இருந்தும் வந்தவர்கள் அல்ல. எங்கள் கட்சியும் அரசியல் பின்னணி கொண்ட கட்சி அல்ல.
மேலும், நான் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அல்ல. மற்ற கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பெரும்பாலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதைக் காணும் அதே வேளையில், ஆம் ஆத்மி கட்சியினர் கண்ணியமாக இருப்பதால், மக்களால் விரும்பப்படுகிறார்கள். இதுதான் ஆம் ஆத்மியின் டிரேட் மார்க்.
இரண்டாவது முறையாக முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக நாட்டை மிகப்பெரிய முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை. இன்று நாட்டின் சூழல் எல்லாத் தரப்பிலும் மோசமடைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் அமைதியின்மை, சண்டைகள், வன்முறைகள், ஊழல்கள், கொள்ளைகள். இது போன்ற சூழலலை இதற்கு முன்பு இந்த சமூகத்தில் பார்த்ததில்லை. ஆகவே, 2024இல் பாஜகவை ஆட்சியிலிருந்து நீக்குவதே நாம் தேசத்திற்கு செய்யும் மிகப்பெரிய தேசபக்தி செயலாகும். அப்போதுதான் நாடும் முன்னேறும்.
மேலும், அவர்கள் இதுவரை எடுத்த முடிவுகளை எதற்காக எடுத்தார்கள் என்பது யாருக்கும் புரியாத ஒன்று. 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களின் வேலைகள், தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் பலவும் முடக்கப்பட்டு, இந்தியப் பொருளாதாரம் 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது.