நாட்டின் தலைநகரான டெல்லியில் பன்மொழிகளுக்கான மேடையை அமைக்கும் வகையில் யூனியன் பிரதேச அரசின் கலாசாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அந்த வகையில், கொங்கணி மொழி, பண்பாட்டை வளர்க்கவும், பேணிப் பாதுகாக்கவும் கொங்கணி அகாதமி அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “கொங்கணி பேசும் அனைத்து மக்களுக்கும், கொங்கணி மொழியை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். கொங்கணி மொழியை மேம்படுத்துவதற்காக டெல்லியில் கொங்கணி அகாதமி ஒன்றை அமைக்க அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்பமான இந்திய-ஈரானியக் குடும்பத்திலுள்ள இந்திய-ஆரிய மொழிகள் பிரிவைச் சேர்ந்த தெற்கு வலய மொழிகளுள் ஒன்றாக கொங்கணி மொழியை மொழியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மக்கள் தொகையின் அடிப்படையில், இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளில் இது 15ஆவது இடத்தில் உள்ள கொங்கணி மொழியானது, கோவாவின் அதிகாரப்பூர்வ மொழியாக விளங்குகிறது. இந்தியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் உள்ள மக்களால் பேசப்படும் கொங்கணிக்கு கோவாவில் தேவநாகரியே அதிகாரப்பூர்வமான எழுத்தாக உள்ளது.
கர்நாடகத்தில் வாழும் கொங்கணி பேசுவோர் கன்னட எழுத்துகளையும், கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு போன்ற பகுதிகளில் வாழ்வோர் மலையாள எழுத்துகளையும் பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்திலும், மகாராஷ்டிரத்திலும் வாழும் சில இஸ்லாமியர்கள் அரபு எழுத்துகளையும் பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க :'கரோனா தடுப்பூசி விநியோகம் விரைவில் தொடங்கப்படும்' - ஹர்ஸ் வர்தன்