டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள அவுரங்கசீப் லேன் சாலைக்கு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் லேன் என பெயரிடப்பட்டு உள்ளது. அவுரங்கசீப் லேன் என்ற பெயருக்கு பதிலாக டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் லேன் என்று மறுபெயரிடும் முடிவுக்கு கடந்த மாதம் டெல்லி நகராட்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கிய நிலையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து டெல்லி லுடியன்ஸ் நகரில் உள்ள அவுரங்கசீப் லேன் என்ற பெயர் பலகை நீக்கப்பட்டு அதற்கு பதிலாக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் லேன் என்ற பெயர் பலகைகள் வைக்கப்பட்டன.
முன்னதாக அவுரங்கசீப் லேன் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிடும் போது டெல்லி நகராட்சி கவுன்சில் துணைத் தலைவர் சதீஷ் உபாத்யாய், அவுரங்கசீப் இந்திய கலாச்சாரத்தை அழிக்க முயன்றதாகவும், முகலாய பேரரசரின் பெயரில் எந்த சாலையும் இருக்கக்கூடாது என்றும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள அவுரங்க சீப் சாலையை, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்வதற்கான முன்மொழிவுக்கு டெல்லி நகராட்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவுரங்கசீப் சாலை, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.