டெல்லியில் காற்று மாசு விவகாரம்(Delhi air pollution) குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
தீபாவளிக்குப்பின் கடுமையான காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லி திணறிவருகிறது. தொடர்ந்து ஒரு வாரமாக காற்று மாசு பிரச்னை மிகமோசமான இருந்துவரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் காற்று மாசு விவகாரத்தில் டெல்லி அரசும், மத்திய அரசும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நிலையை உணர்ந்து அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிவுறுத்தியது.
முழு லாக்டவுனுக்குத் தயார்
நீதிமன்ற கேள்விக்கு பதிலளித்த டெல்லி ஆம் ஆத்மி அரசு(AAP government), தலைநகர் டெல்லியில் மாசு பிரச்னையை சீர் செய்ய முழு லாக்டவுன்(complete lockdown) அமல்படுத்த அரசு தயாராகவுள்ளது. ஆனால், அண்டை மாநிலங்களும் லாக்டவுன் நடவடிக்கையை மேற்கொண்டால்தான் இதற்கு உரியத் தீர்வு எட்டப்படும். டெல்லியில் மட்டும் லாக்டவுன் அமல்படுத்தினால் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும்.
அதேவேளை லாக்டவுன் நடவடிக்கைக்கு மத்திய அரசோ, காற்று தர மேலாண்மை ஆணையமோ பரிந்துரை செய்தால் அதை செயல்படுத்த மாநில அரசு தயாராகவுள்ளது. இவ்வாறு டெல்லி அரசு கூறியது.