டெல்லி : மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதிநிதிகள் குழு நாளை (ஆகஸ்ட். 2) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் வன்முறை வெடித்து வருகின்றன. வன்முறைச் சம்பவங்களில் சிக்கி 170க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடு வாசல்களை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதிகளை போல் முகாம்களில் தஞ்சமடையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், மணிப்பூர் கலவரம் மற்றும் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஜூலை 29 மற்றும் 30ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியின் 21 பிரதிநிதிகள் குழு மணிப்பூர் மாநிலம் சென்றது. தலைநகர் இம்பாலுக்கு சென்ற குழுவினர், வன்முறை பாதித்த இடங்களை ஆய்வு செய்தனர். மேலும் கலவரச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள், மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.