உத்தரப்பிரதேசம் (பைரியா):உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து, உத்தரப்பிரதேச மாநிலம் பைரியாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ராஜ்நாத் சிங் பேசியதாவது, 'உக்ரைனில் என்ன நடந்தாலும் சரி, இந்தியாவைப் பொறுத்தவரை நாம் அமைதியைத்தான் விரும்புகிறோம்.
உக்ரைன் - ரஷ்யா பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதில், இந்தியா முக்கியப்பங்கு வகித்து வருகிறது. தானாக முன்வந்து எந்த நாட்டையும் தாக்கும் பழக்கம் இந்தியாவுக்கு கிடையாது. உலகம் அமைதி பெற வேண்டும் எனில், அனைத்து நாடுகளும் இந்த கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்' எனக் கூறினார்.
ஐந்தாம் கட்டத் தேர்தல்
தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி, சுல்தான்பூர், சித்ரகூட், பிரதாப்கர், கௌசாம்பி, பிரயாக்ராஜ், பரபாகி, பஹ்ரைச், ஷ்ரவஸ்தி, கோண்டா, அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஐந்தாம் கட்டத்தேர்தலில் 692 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களின் தேர்தல் விதியை சுமார் 2.24 கோடி வாக்காளர்கள் முடிவு செய்வார்கள். அண்மையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
ஏழு கட்டங்களாக நடைபெறும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத்தேர்தலின், நான்கு கட்ட வாக்குப்பதிவு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
மீதமுள்ள இரண்டு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும்.
இதுகுறித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீபாவளி மற்றும் ஹோலிப் பண்டிகையின்போது சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: புறப்பட்டது நான்காவது விமானம்: உக்ரைனில் சிக்கிக்கொண்ட 198 இந்தியர்கள் பாதுகாப்பாக புறப்பட்டனர்