தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு - சீன, ரஷ்ய அமைச்சர்கள் பங்கேற்பு! - SCO meet in india

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

SCO meet
SCO meet

By

Published : Apr 23, 2023, 2:58 PM IST

டெல்லி : அடுத்த வாரம் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீனா மற்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. வரும் ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷெர்கே ஷோகய், சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங் பூ உள்ளிட்டோர் டெல்லி வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம் ரஷ்ய மற்றும் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் வருகை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் இந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் இந்த மாநாட்டில் அவர் காணொலி வாயிலாக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்தியா வருவது உறுதி செய்யப்பட்ட போதும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நேரடியாக கலந்துகொள்வாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் லீ, இந்தியா வரும் பட்சத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இழுபறி ஆகி வரும் லடாக் எல்லை பிரச்னைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தற்போது உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் இந்தியா, ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் குடியரசு தலைவர்களால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நிறுவப்பட்டது.

பிராந்திய ரீதியிலான பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கும் சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக இந்த ஷங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு இயங்கி வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டன.

இதையும் படிங்க :சொந்த நகரின் மீது குண்டு வீசிய ரஷ்யா - ராணுவம் கொடுத்த விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details