டெல்லி: குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் டிசம்பர் 8ஆம் தேதி ஏற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீக்காயத்துடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
உடனடியாக விபத்து நடைபெற்ற பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஹெலிகாப்டர் கறுப்பு பெட்டி உள்ளிட்டவற்றைக் கைப்பற்றும் முயற்சியிலும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
வழிமுறைகள் பரிந்துரை
இந்த விபத்து குறித்து, ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது. விசாரணை நிறைவுபெற்ற நிலையில், அதன் மீதான அறிக்கையை விசாரணைக்குழு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தது.
மேலும், அந்த அறிக்கையில் விபத்து குறித்த காரணங்களும், வருங்காலத்தில் முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் ராணுவ ஹெலிகாப்டர்களில், இதுபோன்ற விபத்துகள் ஏற்படாவண்ணம் தடுப்பதற்கான வழிகளையும் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெ., வேதா நிலையம் வழக்கு: அரசு கையகப்படுத்தியது சட்ட விரோதம் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு