கொல்கத்தா: பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம் 'The Dairy of West Bengal'. இப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 8ம் தேதி வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் அதிக கொலைகள் நடப்பது போலவும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது போன்றும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்து மக்கள் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது போலவும், மேற்குவங்கத்தின் ஒருசில நகரங்கள் தீப்பற்றி எரிவது போன்ற காட்சிகளும் டிரைலரில் இடம்பெற்றுள்ளன.
தேசிய குடிமக்கள் பதிவேடு, ரோஹிங்கிய அகதிகள் போன்ற சர்ச்சை விவரங்கள் டிரைலரில் இடம்பெற்றுள்ள நிலையில், மேற்கு வங்கம் இந்தியாவின் இரண்டாவது காஷ்மீராக மாறியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவின் அம்ஹெர்ஸ்ட் வீதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மேற்குவங்க மாநிலம் குறித்து அவதூறு பரப்புவதாகவும், படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் படத்தின் இயக்குநர் சனோஜ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 30ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து இயக்குநர் சனோஜ் கூறுகையில், "உண்மை ஆதாரங்களின் அடிப்படையில் தான் படத்தை இயக்கியுள்ளேன். மேற்கு வங்க மாநிலத்தின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது எனது எண்ணம் இல்லை. முழுமையாக ஆய்வு செய்த பிறகு, உண்மையான தகவல்களை மட்டுமே படத்தில் கூறியுள்ளோம்.