நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
நாட்டில் ராணுவ தளவாடங்களை உள்நாட்டில் வடிவமைத்து, உற்பத்தியை மேம்படுத்துவதை ஊக்குவிக்க, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பல கொள்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு தளவாட கொள்முதல் நடைமுறை 2020இன் கீழ், தளவாட பொருட்களை உள்நாட்டில் கொள்முதல் செய்ய இந்த நடவடிக்கைகள் முன்னுரிமை அளிக்கின்றன. பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டிய 2851 தளவாடப் பொருட்கள், 209 சேவைகள் அடங்கிய பட்டியல் அறிவிக்கப்பட்டது.
2018-19ஆம் ஆண்டு முதல் 2020-21ஆம் ஆண்டு வரை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ராணுவ தளவாட கொள்முதலுக்கு ரூ.2,47,515 கோடி மதிப்பில் 150 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில், தளவாட பொருட்களின் கொள்முதலுக்கு 191 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் 121 ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களிடம் கையெழுத்திடப்பட்டன.