கார்கோன் (மத்தியப்பிரதேசம்):மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள கார்கோன், நீமுச், மண்ட்சூர் மற்றும் ஷிவ்புரி ஆகிய இடங்களில் உள்ள ஐடிஐ கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர், ராகேஷ். இவர் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தனது வேலையை இழந்துள்ளார். இதனால், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடும் பழக்கம் ராகேஷை அடிமையாக்கியுள்ளது.
இதன் காரணமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். இந்தக் கடனை அடைக்க கள்ள ரூபாய் நோட்டுகளை அடிப்பதாக திட்டமிட்டுள்ளார். இதற்காக யூடியூப்பில் கள்ள நோட்டை அச்சடிப்பது தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்த்துள்ளார். தொடர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பொருட்கள் சேகரித்து, அதனை அச்சடிக்கத் தொடங்கியுள்ளார்.
இதுவரை 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை சந்தையில் புழக்கத்தில் விட்டுள்ளார், ராகேஷ். அதிலும், இவர் தயாரித்துள்ள கள்ள நோட்டுகளுக்கும் அசல் நோட்டுகளுக்குமான வித்தியாசத்தை அறிய சிரமமாகவும் இருந்துள்ளது. இதற்காக இந்த நோட்டின் எடையை அசலுக்கு சமமாக மாற்ற, ஏ4 அளவு காகிதத்தை 85 முதல் 90 கிராம் வரை பயன்படுத்தியுள்ளார்.
மேலும், அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட கிராமப்புறங்களையும் பெட்ரோல் நிலையங்களையும் தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கார்கோன் காவல்துறையினர், தீடீர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது, கள்ள நோட்டுகளை அச்சடிக்க ராகேஷுக்கு உதவியாக இருந்த பிரகாஷ் ஜாதவ் (32) மற்றும் விக்கி என்கிற விவேக் (25) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த 4 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் ரூ.50, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2000 அடங்கிய 449 கள்ள நோட்டுகள் இருந்துள்ளன. பின்னர் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2,000 ரூபாய் அசல் நோட்டுகளுக்கு பதிலாக 5,000 ரூபாய்க்கான போலி நோட்டுகளை வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களுக்கு தலைமையாக செயல்பட்ட ஐடி பொறியாளர் ராகேஷ், பிதாம்பூர் மற்றும் செந்தவா உள்ளிட்ட பல இடங்களில் வசித்து வருவதாக வந்த தகவலையடுத்து, அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஓடி போகலாம் வா... காதலனின் அழைப்பை மறுத்த காதலி வெட்டி கொலை...