கவுகாத்தி (அசாம்): பாமுனி மலைப் பகுதியில் 18 யானைகள் உயிரிழந்த சம்பவம் மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநிலத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்ற மறுநாளே இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுசூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா சம்பவம் நடத்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். யானைகளின் உடற்கூறாய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.
யானைகள் இறப்பு தொடர்பாக மூன்று நாட்களில் முதற்கட்ட அறிக்கையும், 15 நாட்களில் முழு அறிக்கையையும் பதிவுசெய்து சமர்பிக்க அமைச்சர் அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மிருகங்கள் வதைக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு 22 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. தற்போது மின்னல் தாக்கி யானைகள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், உயிரிழப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது சூழலியல் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.