டெல்லி:கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியில் உள்ள அம்ரபாலி ட்ரீம் வேலி சொசைட்டியின் கட்டுமானத்தில் லிப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நொய்டா எக்ஸ்டென்ஷன் என்று அழைக்கப்படும் கிரேட்டர் நொய்டா மேற்கு என்னும் இடத்தில் உள்ள அம்ரபாலி ட்ரீம் வேலி சொசைட்டியின் கட்டுமானத்தில் நேற்று (செப்.15) காலை 8.30 மணியளவில் லிப்ட் அறுந்து விழுந்து கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் கட்டுமானப் பணியில் இருந்த தொழிலாளர்களை தரைத் தளத்தில் இருந்து ஏற்றிச் சென்ற சர்வீஸ் லிப்ட் 14வது மாடியில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
தொடர்ந்து, உயிரிழந்த தொழிலாளர்கள் பிகார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இஷ்தாக் அலி (23), பிகாரின் பங்காவைச் சேர்ந்த அருண் தந்தி மண்டல் (40), பிகார் கதிகாரைச் சேர்ந்த விபோட் மண்டல் (45), உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த அரிஸ் கான் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்தவர்கள் பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அசுல் முஸ்தகீம், அப்துல் முஸ்தகீம், குல்தீப் பால், கைஃப், அர்பாஸ் அலி என காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அரசு நடத்தும் NBCC-இன் இரண்டு அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட நீதிபதி மணீஷ் வர்மா, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய வர்மா, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொழிலாளர் சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி இழப்பீடு வழங்க நாங்கள் பரிந்துரைப்போம் என தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றதாக விஜயலட்சுமி கடிதம்; ‘வாபஸ் பெற்றாலும் சீமான் ஆஜராக வேண்டும்’ - போலீஸ் தரப்பு