விஜயநகரம்:ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் 14க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிக்னல் பிரச்சினை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து உள்ளனர்.
விசாகபட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயில் தொழில்நுட்பம் காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து. அப்போது அதே வழித் தடத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து ராயகடா பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் 14க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிக்னல் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மீட்பு படையினருடன் சேர்ந்து உள்ளூர் மக்களும் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் விபத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்து குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாகவும், விபத்தில் சிக்கிக் கொண்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இடம் மாற்றப்பட்டு வருவதாகவும், விபத்து தொடர்பாக அந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பேசியதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
ஆந்திர ரயில் விபத்து குறித்து கவலை தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டு உள்ளார்.
ரயில் சோவையில் மாற்றம்:ஆந்திர ரயில் விபத்தை அடுத்து மற்ற ரயில்களின் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இது குறித்து கிழக்கு கடற்கரை ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "விபத்தை அடுத்து 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 15 ரயில்கள் மாற்று வழித் தடத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் 7 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:கேரளா குண்டுவெடிப்பு: எதற்காக குண்டு வைத்தேன்? சரணடைந்தவர் கூறுவது என்ன?