பாட்னா (பீகார்): பீகார் மாநிலத்தில் மதுவிற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மது அடிமைக்கு ஆளானவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கின்றனர். அவ்வாறு, அம்மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-யை எட்டியுள்ளது. இதனைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 27 பேர் உயிரிழந்த நிலையில், ஈடிவி பாரத்தின் ஆய்வு அறிக்கையின் படி, கடந்த 15ஆம் தேதி முதல் 40 பேர் வரையில் உயிரிழந்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. துர்கௌலியா, ஹர்சித்தி, சுகௌலி, ரகுநாத்பூர் மற்றும் பஹர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கள்ளச்சாராயம் குடித்ததால் பலரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் இது தொடர்பாக தங்களது கடமையை செய்யத் தவறியதாக பலரையும் அம்மாநில அரசு பணியிடைநீக்கம் செய்துள்ளது.
சதார் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பலரும் உயிருக்குப் போராடி வரும் சூழ்நிலையில், அடுத்தடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் உடற்கூராய்வுக்குப் பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 174 பேரிடம் இவை தொடர்பாக தீவிர விசாரணையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.