அலகாபாத் (உத்தரப் பிரதேசம்):ஆக்சிஜன் இல்லாமல் இறப்பு ஏற்படுவது இனப்படுகொலைக்கு சமம் என அலகாபாத் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
லக்னோ, மீரட் மாவட்டங்களில் பிராணவாயு கிடைக்காமல் நோயாளிகள் தொடர்ந்து மரணித்துவருவது குறித்து சமூக வலைதளங்களில் காணொலிகள் பரவின. இது குறித்து அலகாபாத் நீதிமன்றம் கடுமையான கருத்தை தெரிவித்திருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறந்தால், அது இனப்படுகொலைக்கு சமம் என விமர்சித்தனர். அனைத்து நோயாளிகளுக்கும் பிராணவாயு கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். இது அரசின் கடமை.
மேலும், தற்போதைய கரோனா தாக்கத்தில், பிராணவாயு தேவை அதிகரித்து வருவது அரசுக்கு தெரிந்தும், போர்கால அடிப்படையில் கட்டமைப்புகளை உருவாக்காதது பெரும் வேதனை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக்சிஜன்தயாரிக்க என்ன செலவாகும்?
162 பிஎஸ்ஏ ஆக்சிஜன் நிலையங்கள் நிறுவுவதற்கான நிதி ரூ.201 கோடியாகும். அதன்படி, ஒரு ஆலைக்கு ஆகும் செலவு ரூ.1.25 கோடி மட்டுமே. அதனுடையெ திறன் நிமிடத்திற்கு 100 லிட்டர் முதல் நிமிடத்திற்கு 1,000 லிட்டர் வரை மாறுபடும். நிமிடத்திற்கு 1,000 லிட்டர் பிராணவாயு தயாரிப்பு திறன் கொண்ட ஒரு ஆலையால் ஒரே நேரத்தில் 100-160 நோயாளிகளுக்கு பிராணவாயு ஆதரவைப் பூர்த்தி செய்ய முடியும். இதனை பல்வேறு மாநிலங்கள் செய்துள்ளன.
தற்போது சுமார் ரூ.2,000 கோடி செலவு செய்தால், 1,540 மெட்ரிக் டன் தினசரித் தேவைக்கான பிராணவாயுவை நாம் உற்பத்திசெய்துகொள்ள முடியும் என்கிறது வல்லுநர்களின் ஆய்வு.