நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிக அளவில் உள்ளது. தினந்தோறும் நான்காயிரம் பேர் உயிரிழக்கின்றனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கரோனா இறப்பு விகிதத்தில் கேள்வி எழுப்பி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
இதுதொடர்பான அவரது ட்வீட்டில், "குஜராத்தில் கடந்த ஆண்டு மே மாத இறுதியில் 58 ஆயிரத்து 68 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 873 இறப்புச் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றிற்கு இடையே இருக்கும் வித்தியாசம் 65 ஆயிரத்து 85 ஆகும். ஆனால் குஜராத் அரசு நான்காயிரத்து 219 கரோனா மரணங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக்கத் தெரிவித்துள்ளது. எனில், மீதமிருக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்ததற்கான காரணம் என்ன? உயிரிழப்புகளின் வேறுபாட்டை குஜராத் அரசும் மத்திய அரசும் விளக்க வேண்டும்" எனப் புள்ளி விவரங்களுடன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இவரின் ட்வீட் சமூக வலைதளத்தில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.