ஹவேரி (கர்நாடகா):உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை (பிப். 24) போரை தொடங்கியது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஏழாம் நாளான இன்றும் (மார்ச் 2) நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.
முன்னதாக, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ்வில் நேற்று (மார்ச் 1) நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின்போது, இந்திய மாணவர் நவீன் சேகரப்பா (22) உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவர் கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கார்கீவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழக்கத்தில் நான்காம் ஆண்டு, மருத்துவப் படிப்பு பயின்று வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், நவீனின் உடல் அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள மருத்துவமனை நிர்வாகம் அதனை காணொலியாக பதிவுசெய்து உக்ரைனில் சிக்கியுள்ள அவரின் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளது.
அந்த காணொலியை நண்பர்கள், நவீனின் குடும்பத்தினருக்கும் அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் உடல்களோடு உடலாக நவீனின் உடலும் குவிக்கப்பட்டுள்ளது காணும்போது, அவரின் உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.