போபால் : மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தில், வீடியோவில் இருந்த தஸ்வத் ராவத் என்ற இளைஞரை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அழைத்து மரியாதை செய்த நிலையில், திடீர் திருப்பமாக அந்த வீடியோவில் இருக்கும் நபர் தான் இல்லை என தஸ்வத் ராவத் கூறியதாக தகவல் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாஜக பிரமூகர் பர்வேஷ் சுக்லாவை வன்கொடுமை தடுப்பு மற்றும் எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீடியோவில் இருந்த பழங்குடியின இளைஞர் தஸ்வத் ராவத் என்பவரை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அழைத்து, அவரது பாதங்களை கழுவி நலம் விசாரித்தார். இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த வீடியோவில் இருக்கும் நபர், தான் இல்லை என தஸ்வத் ராவத் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய தஸ்வத் ராவத், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட வீடியோவில் இருக்கும் நபர் தான் இல்லை என்றும், இதற்கு முன் பாஜக பிரமுகர் பர்வேஷ் சுக்லாவை பார்த்தது கூட இல்லை என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உண்மையாக பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலாக வேறொருவரின் பாதங்களை கழுவி உள்ளதாக மாநில காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.