கயா: பீகார் மாநிலம் புத்தகயாவில் "புத்த மஹோத்சவம்" போதனை நிகழ்ச்சி கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாள் நிகழ்ச்சியில் திபத்திய புத்த மதகுரு தலாய்லாமா கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.
சொற்பொழிவின் மூன்றாவது மற்றும் கடைசி நாளில் பேசிய புத்த மதகுரு தலாய்லாமா, சீன மக்களின் மனதில் இருந்து புத்த மதத்தை வேரோடு அழிக்க சீன அரசு போராடி வருவதாக கூறினார். சீன அரசால் புத்த மதம் பாதிக்கப்பட்டதாகவும், விஷம் போல் புத்த மதத்தை கருதிய சீன அரசு பல்வேறு புத்த மடங்களை அழித்ததாக தெரிவித்தார்.
புத்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் சீனாவில் அதிகம் இருப்பதாகவும், அதனால் சீன அரசால் பவுத்தத்தை அழிக்க முடியவில்லை என்றார். என் மீதும், புத்த மதத்தின் மீதும் நம்பிக்கை கொள்பவர்கள் நான் அளிக்கும் புத்த சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறிய தலாய்லாமா அவர்கள் சீனராகவோ, திபத்தியராகவோ, மங்கோலியராகவோ இருந்தாலும் சரி என்று தெரிவித்தார்.