டெல்லி: எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, ட்விட்டர் பயனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ப்ளூ டிக்கிற்கு கட்டணம், ட்விட்டர் பதிவுகளுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் ட்விட்டர் பயனர்கள் சோர்வடைந்திருந்த நிலையில், இந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்தி மெட்டா நிறுவனம் 'த்ரெட்ஸ்' செயலியை உருவாக்கியது. ட்விட்டருக்குப் போட்டியாக இன்ஸ்டாகிராமை மையமாகக் கொண்ட த்ரெட்ஸ் செயலியை மெட்டா நிறுவனம் உருவாக்கியது. இந்த த்ரெட்ஸ் செயலி கடந்த 5ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்காக இந்த செயலியை மெட்டா அறிமுகம் செய்தது.
த்ரெட்ஸ் செயலி ட்விட்டரைப் போலவே முழுவதும் டெக்ஸ்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டபோது இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே நாட்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் இதில் கணக்கு தொடங்கியதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். அதேபோல் 7 மணி நேரத்திலேயே த்ரெட்ஸ் செயலியில் ஒரு கோடி பதிவுகள் இடப்பட்டன. இந்த த்ரெட்ஸ் செயலியால் ட்விட்டர் நிறுவனத்திற்கு ஆபத்து என்றும் பல்வேறு தரப்பினரும் கூறினர்.
இதனிடையே ட்விட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியே த்ரெட்ஸ் செயலி உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.