தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் - டி. ராஜா

டெல்லி: ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டி. ராஜா
டி. ராஜா

By

Published : Mar 22, 2021, 10:07 PM IST

2009ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது ஒரு லட்சத்திற்கு மேலான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டன. போர் நடைபெற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில், குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் எனத் தொடர் கோரிக்கை வைக்கப்பட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ஐநா மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்திய அரசு, இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் கொடுமைகள் குறித்து ஐநா மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்திய அரசு எடுத்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, எந்தவித சந்தேகமும் இன்றி, இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 2009ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற சிவில் போரை தமிழர்களுக்கு எதிரான போராக அந்நாட்டு அரசு மாற்றியது. மனித உரிமைகள் மீறப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இலங்கையில் நடந்த போரில் அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட எந்தவொரு விசாரணைக்கும் இலங்கை அரசு தயாராக இல்லை. ஏற்கனவே ஐநா மன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளிலிருந்தும் இலங்கை அரசு விலகிக்கொண்டது.

இந்நிலையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐநா மனித உரிமை மன்றத்தில் ஆறு நாடுகளின் சார்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு நிலைப்பாடு எடுக்குமானால் அது அநீதிக்குத் துணைபோவதாகவே அமையும். இதுவரை இந்தியா எடுத்துவந்த நிலைப்பாட்டுக்கும் எதிராக இருக்கும்.

எனவே, போர்க்குற்றவாளிகளை இன்றுவரை பாதுகாத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். அதுவே குறைந்தபட்ச நியாயமாக இருக்கும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details