டெல்லி:தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள டாக்டே புயல், அடுத்த ஆறு மணிநேரத்தில் தீவிர புயலாகவும், அடுத்த 12மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறும் என கணிக்கப்படுகிறது. மேலும், இது வடமேற்காக நகர்ந்து குஜராத் மாநிலம், போர்பந்தர், நலியா கடற்கரையில் மே 18ஆம் தேதி கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. 50க்கும் மேற்பட்ட பேரிடர் மேலாண்மை குழுக்கள் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
டாக்டே புயல் எதிரொலியால், கேரளா, கர்நாடகா மாநில கடற்கரைகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மே 15ஆம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், அதே பகுதிகளில் மே 16ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இந்தப் புயல் எச்சரிக்கையால், தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு-மத்திய அரபிக்கடல், வடகிழக்கு அரபிக்கடல் சந்திக்கும் பகுதிகளில் மீனவர்கள் மே 18ஆம் தேதிவரை மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கேரள கடற்பகுதியில் தமிழ்நாடு படகு மூழ்கி விபத்து: 8 மீனவர்கள் மாயம்!