ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு இடையே 'குலாப்' புயல் சில நாள்களுக்கு முன்னால் கரையைக் கடந்தது. இப்புயலில் எச்சங்கள் தெலங்கானா, மகாராஷ்டிரா பகுதிகளில் நகர்ந்து, நேற்று (செப். 29) தெற்கு குஜராத்தில் நிலைகொண்டு, குஜராத் கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (வடகிழக்கு அரபிக்கடல் பகுதி) உருவானது.
இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்தார் நாடு பரிந்துரை
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக். 1) புயலாக உருவாகும் எனக் கூறப்பட்ட நிலையில், அப்புயலுக்கு, கத்தார் நாட்டின் பரிந்துரைப்படி 'ஷாகீன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஷாகீன் புயல், மேற்கு - வடமேற்குத் திசையில் பாகிஸ்தானை நோக்கிப் பயணிக்க உள்ளது. இதனால், சௌராஷ்டிரா, குட்ச் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும், குஜராத், வட கோன்கன், மேற்கு வங்கத்தில் கங்கை ஆற்றங்கரையோர பகுதிகள், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 3) வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மேகாலயாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு