கட்ச்: தென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த புயலுக்கு பெங்காலி மொழியில் பிப்பர்ஜாய் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வரும் 14ஆம் தேதி வரை வடகிழக்கு பகுதியை நோக்கி நகரும் இந்த பிப்பர்ஜாய் புயல், குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை மாண்ட்வி (குஜராத் கடற்பகுதி), கராச்சி (பாகிஸ்தான் கடற்பகுதி) இடையேயும் ஜகாவ் துறைமுகம் (குஜராத்) இடையே வரும் 15ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க:பேய்கள் நடமாட்டத்தை விசாரித்த காவல் அதிகாரி சஸ்பெண்ட்: கொள்ளை வழக்கில் நடவடிக்கை
இந்நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளுடன் பேசிய முதலமைச்சர், மக்களின் பாதுகாப்பையும், மருத்துவம், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.