குஜராத்: பார்மெர் மாவட்டத்தில் உள்ள பக்ஹாசர் கிராமத்தின் எல்லைப் பகுதிகளில் வியாழன் இரவு சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேலும், அப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மரங்கள், குடிசை வீடுகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு நிலையம் மேலும் இரண்டு நாட்களுக்கு அப்பகுதிகளுக்கு ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம், ராணுவம், எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவற்றை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், நிலைமையை உன்னிப்பாக கவணிக்கும் படியும் பார்மெர் மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், அம்மாவட்டத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் ரத்து செய்ததோடு, 'பணவீக்க நிவாரண முகாம்களையும்’ இரண்டு நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஒத்தி வைத்துள்ளது. மேலும், கிராம நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது.
மோசமான வானிலையின் காரணமாக, பார்மெர் பகுதிகளுக்கு வரும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிப்படைந்த பகுதிகளை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேலும் 300க்கும் மேற்பட்ட தன்னார்வ மீட்பு படையினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பார்மெர் மாவட்ட ஆட்சிய அருண் குமார் புரோஹித் கூறியதாவது, “கரையை கடந்த புயல் தற்போது முன்னோக்கி நகர்கிறது. இதன் பாதிப்புகளை வியாழன் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பார்க்க முடிகிறது. மேலும், காவல் துறை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, விமானப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவை தயார் நிலையில் இருப்பதால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ள நீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு, அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி உள்ளதாகவும், திறந்த வெளியில் தங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களையும் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி உள்ளது என மாவட்ட ஆட்சியர் அருண் குமார் புரோஹித் தெரிவித்துள்ளார். .
வாணிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, ஜூன் 16 முதல் 19 வரை பிப்பர்ஜாய் புயலின் காரணமாக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் இது குறித்து பயப்பட வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், மழையின் காரணமாக அப்பகுதிகளில் வெப்பம் குறைந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Cyclone Biparjoy Impacts: குஜராத்தை புரட்டிப்போட்ட பிப்பர்ஜாய் புயல் - 22 பேர் காயம், 940 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு!