ஜார்கண்ட்: விஞ்ஞானம் வளர வளர அதன் ஊறுகளும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. நவீன காலத்திற்கு ஏற்ப திருட்டு, கொள்ளையும் ஆன்லைன் மயமாக மாறி வருகின்றன. அப்படி சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களிடம் நமது வங்கி உள்ளிட தரவுகள் சிக்கிக் கொண்டால் என்ன நேரும் என நினைத்து பார்க்கக் கூட முடியாத வகையில் பயம் ஆட்கொள்கிறது.
சுவர் ஏறி திருடுவது, வீட்டின் பூட்டை உடைப்பது, பிட் பாக்கெட் அடிப்பது உள்ளிட்ட அந்தகால திருட்டுகள் குறைந்து டிரெண்டிற்கு ஏற்ப சைபர் திருட்டுகள் பேஷனாகி வருகின்றன. அப்படி சைபர் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை பிடித்த போலீசாருக்கே, தலைச் சுற்றல் வரும் அளவிலான சம்பவம் ஜார்கண்டில் அரங்கேறி உள்ளது.
ராக்சுகுடோ கிராமத்தில் சிலர் சைபர் திருட்டில் ஈடுபடுவதாக அகல்யபூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். எண்ணிக்கை குறைவிலான தொழில்நுட்ப சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சிறு சிறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என போலீசார் எண்ணி உள்ளனர்.
ஆனால் போலீசாருக்கே அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் அடுத்தடுத்து அரங்கேறத் தொடங்கி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சோதனையிட்ட போலீசார் அதில் ஒரு லட்சம் பேரின் வங்கித் தரவுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதேநேரம் லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் செல்போன் எண் உள்ளிட்ட தரவுகள் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்தை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
வங்கிகள் போல் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பண மோசடியில் ஈடுபட்டது, லிங்குகள் மற்றும் ஓடிபி அனுப்பி திரும்பப் பெற்று பணம் திருடியது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அந்த செல்போனில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் ஏற்கனவே சைபர் குற்றங்களில் ஈடுபட்டு சிறை சென்று திரும்பியவர்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
4 பேரிடம் இருந்து 40 சிம் கார்டுகள், 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஐபோன், 18 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :இந்தியாவின் 11 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா - எல்லைப் பிரச்சினையில் மீண்டும் சீண்டுகிறதா?