டெல்லி:காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு நவம்பர் 1 முதல் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு 2600 கன அடி தண்ணீரைக் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் எனக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது.
இந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவில் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் நவம்பர் மாதம் தமிழ்நாட்டிற்குக் காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் இன்று (அக்.30) டெல்லியில் நடைபெற்றது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கர்நாடகா புதுச்சேரி மற்றும் கேரளா தரப்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு தரப்பில் தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.