டெல்லி:தமிழ்நாட்டிற்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று (செப்.26) நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை 3,000 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) 87வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அதிகாரிகள் மற்றும் கர்நாடகா அதிகாரிகள் காணொளிக் காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கர்நாடகா தரப்பில், செப்டம்பர் 25ஆம் தேதி வரை நான்கு நீர்த்தேக்கங்களிலும் மழை பற்றாக்குறை காரணமாக 53.04 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும், செப்டம்பர் 13ஆம் தேதி நிலவரப்படி மாநில அளவில் 161 தாலுகாவில் தண்ணீர் இல்லாமல் முழுமையாக வறட்சியால் பாதிக்கப்பட்டதாகவும், 34 தாலுகா மிதமான வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 32 தாலுகா மிக அதிகமான வறட்சியைச் சந்தித்து உள்ளதாகவும், 15 தாலுகா மிதமான வறட்சியைச் சந்தித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.
இதையும் படிங்க:சிறுதானிய உணவுத் திருவிழா: 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து அசத்திய கல்லூரி மாணவிகள்!!
தமிழ்நாடு அரசு தரப்பில், ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 123.14 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், இதுவரை 40 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளன. எனவே, காவிரியிலிருந்து வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீர் திறந்து விட பரிந்துரை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டன.