டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் தோல்விகள் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி (CWC) சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.21) நடைபெற உள்ளது. முன்னதாக, டிச.19ஆம் தேதி நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் வர உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் தாரிக் அன்வர், 'இன்று நடக்க உள்ள எதிர்க்கட்சிக் கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர், ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடனான கலந்துரையாடலில் கட்சி அமைப்பை நம்பிக்கைக்கு கொண்டு செல்வார் எனத் தெரிவித்துள்ளார்.
இக்கமிட்டியின் உறுப்பினரான குலாம் அஹ்மத் மிர் கூறுகையில், “சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் தோல்விக்கான காரணம் குறித்தும் அந்தந்த மாநில அணிகளுடன் நடத்திய ஆய்வில் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி அமைப்பிற்கு அவர் விளக்குவார். அதேநேரத்தில், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தளுக்கான ஆயத்தப் பணிகள், கூட்டணிகளுக்கான செயல் திட்டம் என்ன என்பன உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும்' எனக் கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில் மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு, பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை இக்கமிட்டியின் தலைவர் விளக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் டிஎம்சி, இடதுசாரி கட்சிகள், எஸ்பி போன்ற பிரதான கட்சிகள் பங்கேற்கின்றன.