டெல்லி: டெல்லியில் புதிய கலால் வரிக் கொள்கையின் கீழ் தனியார் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புதிய கலால் வரிக்கொள்கை மூலம், அத்துறையின் அமைச்சர் மனிஷ் சிசோடியா, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த பிரச்சினை பூதாகரமானதால் கடந்த ஜூலை மாதம், புதிய கலால் வரிக்கொள்கையை கைவிட்டு, பழைய கலால் கொள்கை மீண்டும் செயல்படுத்த டெல்லி அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, இன்று (செப்.1) முதல் டெல்லியில் பழைய கலால்வரிக் கொள்கை அமலுக்கு வந்தது. அதன்படி அரசு மதுபானக் கடைகள் மூலம் மட்டுமே மதுபானங்கள் விற்கப்படுகின்றன. முதற்கட்டமாக 300 கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. புதிய கலால் கொள்கையின்படி திறக்கப்பட்ட அனைத்து தனியார் மதுபானக் கடைகளும் மூடப்பட்டதால், மது குடிப்பவர்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தனியார் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தும் என்றும், இந்த மாற்றத்தால் மதுப்பிரியர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.