நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள ராஜகோபாலசாமி கோயிலின் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ராமன், லட்சுமணன், சீதை, அனுமன் ஆகிய நான்கு ஐம்பொன் சிலைகளை, 1978ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து பொறையார் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாக அலுவலர் செல்வராஜ் புகாரளித்தார்.
இந்நிலையில், ராமன், லட்சுமணன், சீதை ஆகியோரின் சிலைகள் செப்டம்பர் 15ஆம் தேதி லண்டன் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு, இந்திய உயர் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து பேசிய மத்திய கலாசார துறை அமைச்சர் பிரஹ்லாத் படேல், "தமிழ்நாட்டில் விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கோயிலில் இருந்து ராமன், லட்சுமணன், சீதையின் சிலைகள் கடத்தப்பட்டு லண்டனுக்கு அனுப்பியிருக்கலாம். இந்த மூன்று சிற்பங்களின் புகைப்பட ஆவணங்களை பார்க்கும்போது, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசாமி கோயில் சிலைகள் என்று கண்டறியப்பட்டன. சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, இவை அனைத்தும் விஷ்ணு கோயிலில் இருந்து திருடப்பட்டவை என்று தெரியவந்தது.
ராமன், லட்சுமணன், சீதையின் சிலைகள் இந்திய உலோக கலையின் தலைசிறந்த படைப்புகள். அவை முறையே 90.5 செ.மீ., 78 செ.மீ., 74 செ.மீ., உயரம் கொண்டவை. இந்த சிலைகள் அனைத்தும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன" என்றார்.