மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் சில கேள்விகளை முன்வைத்தார். அதில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளை மூலம் ஐந்தாண்டு முன்னோக்கு திட்டம் தயாரிப்பதற்கான கொள்கை திட்டம் ஏதேனும் உள்ளதா?
இத்தகையை திட்டத்தை தயாரிப்பதில் கிராம சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளனவா? என கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “இதற்காக 24.06.2022 தேதியிட்ட அரசாணை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான அறிக்கைகளை தயாரிப்பதில் கிராம சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தாது அறக்கட்டளைக்கு உதவி செய்யலாம். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால், கடலூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அங்கு வாழும் மக்களின் தேவைகள் என்னென்ன என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், மருத்துவம், சுகாதாரம் மற்றும் கட்டமைப்புகள் போன்ற பொதுமக்களுக்கு உடனடியாக தேவைப்படும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.