டெல்லி: அறிவியல்,தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநராக திருநெல்வேலியைச்சேர்ந்த மூத்த அறிவியலாளர் கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர். கலைச்செல்வி, அவரது பள்ளி படிப்பை தமிழ் வழியில் பயின்றவர். தற்போது இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதன்மூலம், கலைச்செல்வி நாடு முழுவதும் உள்ள 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பை வழிநடத்தும் முதல் பெண்மணியாக பதவியேற்றுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி நல்லதம்பி கலைச்செல்வி நேற்று (ஆகஸ்ட் 6) நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் சேகர் மாண்டே ஓய்வுபெற்றார். அதன் பின்னர் கலைச்செல்வி பதவியேற்றுள்ளார். பயோடெக்னாலஜி துறையின் செயலாளரான ராஜேஷ் கோகலேவிற்கு மாண்டேவின் ஓய்வுக்குப் பிறகு CSIRஇன் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
மின் வேதியியல் குறித்து ஆய்வு:சிறப்பாக பணியாற்றமைக்கு கலைச்செல்வி சிஎஸ்ஐஆர் தரவரிசையில் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தார். கலைச்செல்வி 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சிப்பணியில் உள்ளார். இவரது ஆராய்ச்சியில் முதன்மையாக மின்வேதியியல் சக்தி அமைப்புகள் மற்றும் குறிப்பாக, மின்முனைப் பொருட்களின் மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு சாதனம் அமைப்பது குறித்து விளக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் பொருத்தத்திற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ராடு பொருட்களின் மின்வேதியியல் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியது.