புதுடெல்லி:மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 4,985 கிராம பாதுகாப்பு குழுக்களை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது வரை 4,153 கிராம பாதுகாப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
2022-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையின்படி, ஒரு கிராம பாதுகாப்புக் குழுவில் 15 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. பதற்றமான பகுதிகளில் செயல்படும் கிராம பாதுகாப்புக்குழுவின் தலைவருக்கு மாத ஊதியமாக ரூ.4,500 வழங்கப்படுகிறது. தன்னார்வ அடிப்படையில் கிராம பாதுகாப்புக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.4,000 வழங்கப்படுகிறது.
உரிமத்துடன் கூடிய துப்பாக்கியை வைத்திருப்பவர்கள், ஜம்மு-காஷ்மீர் காவல் துறையால் பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளவர்களும் கிராம பாதுகாப்புக் குழுவில் இடம்பெறுவார்கள். மேலும் கிராம மக்கள் தொகை, பாதுகாப்புத் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி, இக்குழு நிறுவப்படும்.