கடப்பா (ஆந்திரா): ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ராமஞ்சனேயபுரம் பகுதியில் இருக்கும் எலக்ட்ரிக்கல் காலனியைச் சேர்ந்தவர் எஸ் சங்கரய்யா. இவரது வங்கிக் கணக்கில் இருந்து திடீரென 5 ஆயிரத்து 500 ரூபாய் காணாமல் போயுள்ளது. அதிலும், சங்கரய்யாவுக்கு ஓடிபி (OTP) எதுவும் வராமலே அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாயமாகி உள்ளது. இதனையடுத்து, அவர் இது தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று கடப்பா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
அது மட்டுமல்லாமல், தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் தளத்திலும் சங்கரய்யா புகாரை பதிவு செய்து உள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் என்ற பெயரில் ஒரு நபர் சங்கரய்யாவை இணைய வழியாக தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது அவர், தாங்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
மேலும், தனது வங்கிக் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றால் சங்கரய்யாவை கொன்று விடுவதாகவும், அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனையடுத்து, சங்கரய்யா இது தொடர்பாக காவல் துறையை அனுகியுள்ளார். இதனையடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணையைத் தொடங்கி உள்ளது.
அப்போது, தனிநபர்களின் விரல் ரேகை பதிவுகளை வங்கி வணிக ஏஜெண்ட்ஸ் மற்றும் வங்கி வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் ஆதார் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் மூலமாக பெற்று, அதனை நகலாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை சைபர் கிரைம் சிறப்பு படையினர் கண்டுபிடித்து உள்ளனர். இவ்வாறுதான் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து போலியான கைரேகை மூலம் பணத்தை திருடி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.