அமராவதி (ஆந்திர பிரதேசம்) : தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல், ஆந்திராவில் சங்கராந்தி விழா கொண்டாடப்படும். இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறும். இந்தப்போட்டிக்கு அரசு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தடையை மீறி சேவல் சண்டை ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறும்.
அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் இதற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பார்கள். சேவல் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டு கோடிகளில் பந்தயம் கட்டி போட்டியை நடத்துவார்கள். இதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து போட்டியில் கலந்து கொள்ள வருவார்கள். சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டு, இரவிலும் போட்டியை நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அந்தவகையில் இந்தாண்டும் தடையை மீறி சங்கராந்தி விழாவையொட்டி மூன்று நாள்கள் சேவல் சண்டை நடைபெற்றது.
15 பேர் கைது
கிருஷ்ணா மாவட்டம் சந்திரலபாடு பகுதியில் இரண்டு இடங்களிலும், நந்திகமவில் இரண்டு இடங்களிலும், பரிதாளம், அம்பாபுரத்தில் தலா ஒரு இடங்களில் சேவல் சண்டை வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குச்சிப்புடியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிரகாசம் மாவட்டத்தின் தம்மடப்பள்ளி கிராமத்தில் சேவல் சண்டை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்று காவல்துறையினர் 15 பேரை கைது செய்து ரூ.18,000 ரொக்கப் பணம், மற்றும் மூன்று சேவல்களை பறிமுதல் செய்தனர்.