தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாய்க்காலில் தோன்றிய திடீர் முதலை.. முதலையை காண குவிந்த கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்! - Puducherry Uppanar estuary

புதுச்சேரி உப்பனாறு வாய்காலில் முதலை குட்டி இருப்பதாக பரவிய தகவலால் பொதுமக்கள் கூடியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக வனத்துறையினர் முதலையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வாய்க்காலில் இருந்த முதலை
வாய்க்காலில் இருந்த முதலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 10:11 PM IST

புதுச்சேரி: காமராஜ் சாலையில் உப்பனாறு வாய்காலில் முதலை குட்டி ஒன்று இருந்ததாக வாய்க்கால் பாலத்தை ஒட்டியுள்ள கடையில் பணியாற்றி வரும் ஏழுமலை என்பவர் முதலில் பார்த்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து அவரது நண்பரான ராஜாவிற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர் விரைந்து வந்து புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் வாய்க்காலில் முதலை இருப்பது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வருவதற்கு முன்பாக அந்த இடத்தில் கூடிய பொதுமக்கள், 3 அடி நீளமிருந்த அந்த முதலையை புகைப்படம் எடுத்தனர். இதையடுத்து சிறிது நேரத்திலே வாய்க்காலில் முதலை இருந்த செய்தி அறிந்து காமராஜ் சாலையில் ஏராளமான மக்கள் கூட்டம் குவிந்தது. பொதுமக்கள் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட சற்று நேரத்திலே வைரலானது.

அப்போது பொதுமக்கள் குவிந்திருந்த நிலையில், ஏற்பட்ட வாகன இரைச்சலால் சற்றுநேரத்தில் முதலை தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போனது. முதலையை பிடிக்க வாய்காலில் இறங்கிய வனத்துறையினர் முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் மக்கள் ஏராளமானோர் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் காவல் துறையினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அப்பகுதி எம்எல்ஏ ஜான்குமார் வனத்துறை அதிகாரிகளிடம் முதலையை விரைந்து பிடிக்க வலியுறுத்தினார். இதனிடையே அங்கு வந்த வனத்துறை பாதுகாவலர் வஞ்சுலவள்ளி, முதலையை பிடிப்பதற்காக முதலில் ஊழியர்களிடம் ஆற்றின் ஆழத்தை கணக்கிட உத்தரவிட்டார்.

வாய்க்கால் 5 அடி ஆழம் இருந்ததால், நீரோட்டத்தை நிறுத்தி முதலையை பிடிக்கத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் முதலையை பிடிபடாததால், தொடர்ந்து முதலையை பிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். புதுச்சேரியில் முதல்முறையாக முதலை தென்பட்டதையடுத்து இந்த முதலை எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் பல மணி நேரம் முயற்சி செய்தும் முதலை பிடிபடாததால், பொதுமக்கள் முதலையை பார்த்தால் தானாக பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் விரைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படியிம் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மீண்டும் சோகம்.. மாடு முட்டியதில் நிலைத்தடுமாறி ஓடும் பேருந்தினுள் விழுந்த நபர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details