தேசத் தலைநகர் டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு பின்வரும் செய்தி மேலும் திகில் ஊட்டக்கூடியது.நிஜத்தில் சிறைச்சாலைகளில் இருக்க வேண்டிய குற்றவாளிகள் மாநகர வீதிகளில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.கோவிட்-19காலத்தில் தாறுமாறாய் ஏறிக்கொண்டிருந்த குற்றங்களில் அவர்களின் பங்கு மறுக்க முடியாதது.ஆனால் இதுவரை இந்த விசயம் சரியான கவனத்தையும்,அக்கறையையும் பெற்றிருக்கவில்லை.
இந்த மாதிரியான மனிதர்கள் வெறும் பத்தோ அல்லது இருபதோ அல்ல.அவர்கள் மொத்தம் 3,400பேர்.பரோலிலும் இடைக்கால ஜாமீனிலும் சிறைகளை விட்டு வெளியே வந்தவர்கள் அவர்கள்.கோவிட் தொற்றுக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கின் பொருட்டு மத்திய அரசு சிறைச்சாலையின் கூட்டத்தைக் குறைத்து சற்றுத் தளர்வாக்க விரும்பியபோது அவர்கள் வெளியே வந்தார்கள்.மொத்தம் 6,500பேர் விடுவிக்கப்பட்டனர்.அவர்களில் 3,400பேர் சிறைக்குத் திரும்பாமலே ஊர்சுற்றிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் பெரும்பாலோர் கடுமையான குற்றங்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்.இந்தச் சூழல் டெல்லி காவல்துறைக்கும் திகார் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் ஆகப்பெரும் தலைவலியாகவே இருக்கிறது.மாநகர மாநிலமான டெல்லியில் இன்னும் உயரக்கூடிய குற்றங்களில் வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் இந்தக் கைதிகளின் பங்கு அதிகரிக்கக்கூடும் என்னுமோர் அச்சம் மாநகர வீதிகளில் உலாவிக் கொண்டிருக்கிறது.
டெல்லி: திகார் சிறைச்சாலையின் முன்னாள் சட்ட அதிகாரி சுனில் குப்தா சொன்னது இது: வருடம் 2020-ல் கரோனா தொற்று வழக்குகள் சிறையில் தோன்ற ஆரம்பித்தபோது, சிறையின் கொள்திறனை விட ஒன்றரை மடங்கு அதிகமான அளவில் கைதிகள் நிரம்பி இருந்தனர். அதனால் சமூக இடைவெளியைப் பேணும் பொருட்டு, 6,500 கைதிகள் மெல்ல மெல்ல பரோலிலும் இடைக்கால ஜாமீனிலும் வெளியே அனுப்பப் பட்டார்கள். இவர்களில் 1,184 தண்டனைக் கைதிகள் அவரசரகாலப் பரோலில் திகார் சிறை நிர்வாகத்தாலும், டெல்லி அரசினாலும் வெளியே அனுப்பப் பட்டார்கள். அதே சமயம், 5,556 விசாரணைக் கைதிகள், உச்ச நீதிமன்றம் உருவாக்கிய குழு ஒன்று தீர்மானித்த விதிகளின்படி, இடைக்கால ஜாமீனில் நீதிமன்றத்தால் வெளியே அனுப்பப்பட்டார்கள். கடந்த டிசம்பர் மாதத்துக் கரோனாத் தொற்று வழக்குகள் டெல்லியில் குறைய ஆரம்பித்தபோது, இந்தக் கைதிகள் மீண்டும் சரணடையும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். ஆனால் 50 விழுக்காட்டுக்கு மேலானவர்கள் இன்னும் சரணடையவில்லை.
எங்கே போனார்கள் இந்தக் கைதிகள்
திகார் சிறைச்சாலையின் முன்னாள் சட்ட அதிகாரி சுனில் குப்தாவின் கருத்துப்படி, எல்லாக் கைதிகளும் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்கள். சிறிய அளவு திருட்டிலிருந்து கொலைகள் வரையிலான குற்றங்கள் செய்ததாகச் சொல்லப்பட்ட கைதிகளும் அவர்களில் அடக்கம். அவர்கள் 45-நாள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள். கரோனா தீநுண்மி தாக்குதல் நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், இந்த 45-நாள் கால அவகாசம் பலதடவை நீட்டிக்கப்படும்படி ஆயிற்று. கைதிகளில் பெரும்பாலோனர் சிறைக்குத் திரும்பவில்லை என்னும் செய்தியைத் தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டதாக சுனில் குப்தா தெரிவித்தார். சில கைதிகள் வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றிருக்கலாம்; அல்லது வழக்கமான ஜாமீனில் வெளிவந்திருக்கலாம். சிலர் தங்களது ஜாமீன் காலத்தை அதிகாரப்பூர்வமாக நீட்டிக்கச் செய்திருக்கலாம்; ஆனால் திகார் சிறை நிர்வாகத்திற்குத் தகவல் தராமல் இருந்திருக்கலாம். மேலும், இந்த கரோனா சூழலைப் பயன்படுத்தி பல கைதிகள் தப்பித்து ஓடியிருக்கக்கூடிய சாத்தியம் கூட இருக்கிறது.
அவர்களைப் பிடிப்பது கடினம் என்பதால் குற்றங்கள் அதிகரிக்கலாம்
இன்னும் சிறைக்குத் திரும்பாத 3,400 கைதிகளில் பெரும்பாலோனார் பெரும்பாலான குற்றங்களைச் செய்வார்கள் என்று முன்னாள் டெல்லி காவல்துறை உதவி ஆணையர் வேத் பூஷண் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர்கள் மீண்டும் சிறையில் வந்து சரணடைய வில்லை என்றால் டெல்லி வீதிகளில் குற்றங்கள் பலவற்றைப் புரிவதற்காகவே அவர்கள் தப்பித்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். 2020-ல் அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு திருட்டு, வழிப்பறி, கொள்ளை என்று குற்றங்கள் தாறுமாறாக ஏற ஆரம்பித்தன. இப்போது அவர்கள் மீண்டும் சிறைக்குத் திரும்பாமல் இருப்பதால் மறுபடியும் தெருக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும். அவர்களைக் கைது செய்வது காவல்துறைக்கு ஆகப்பெரும் சவாலாகவே இருக்கிறது. கரோனாத் தொற்று இப்போது டெல்லியில் மறுபடியும் ஆபத்தானதாக மாறிவிட்டது. சமீபத்தில் 300-க்கும் மேற்பட்ட காவலர்களுக்குத் தொற்று உறுதியாகிவிட்டது. இந்தச் சூழலில் காணாமல் போன 3,000 கைதிகளைத் தேடிக் கைது செய்வது என்பது மிகவும் சவாலான ஒரு பணிதான்.
திகார் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையான தண்டனைக் கைதிகளில் பெரும்பாலோனர் திரும்பிவிட்டனர்.அதே நேரத்தில் இன்னும் சிறைக்குத் திரும்பாத விசாரணைக் கைதிகளில் பெரும்பாலோனர் சின்னச்சின்ன குற்றங்கள் செய்தவர்கள்.நீதிமன்றம் அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் தந்திருக்கிறது.அவர்களைப் பற்றிய தகவல்கள் டெல்லிக் காவல்துறையிடம் பகிரப்பட்டிருக்கின்றன.அவர்களில் சிலர் வழக்கமான ஜாமீனைப் பெற்றிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.அதைப் பற்றிய தகவல் சேகரிக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்கிறார் திகார் சிறை டிஜி சந்தீப் கோயல்.
என்ன மாதிரியான குற்றங்களை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதல்ல பிரச்சினை. ஏன் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சினை. டெல்லியில் குற்றங்களின் எண்ணிக்கை மாறாதவண்ணம் ஏறிக்கொண்டே போகிறது. இந்த மாதிரியான சூழலில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் காணவில்லை என்பது காவல்துறைக்குக் கவலை உண்டாக்கப் போதுமான விசயம்தான். காவல்துறை நிர்வாகம் கோவிட்-19-ஐ கையாள்வதில் ஏன் கடுமையாகச் செயல்படவில்லை என்பது புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.
( திகார் சிறைக் கைதிகள் பற்றிய தரவுகள் )
* அவசரகால பரோலில் விடுவிக்கப்பட்ட தண்டனைக் கைதிகள்: 1185
* அவசரகால பரோலிலிருந்ந்து திரும்பிய தண்டனைக் கைதிகள்: 1073
* அவசரகால பரோலில் தப்பித்து ஓடிய தண்டனைக் கைதிகள்: 112
* இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்ட விசாரணைக் கைதிகள்: 5556
* இடைக்கால ஜாமீனிலிலிருந்து திரும்பிய விசாரணைக் கைதிகள்: 2200
* இடைக்கால ஜாமீனில் தப்பித்து ஓடிய விசாரணைக் கைதிகள்: 3356
(புள்ளிவிவரங்கள் ஏப்ரல் 15-ஆம் தேதி நிலவரப்படி)
* இடைக்கால ஜாமீன் பெற்ற கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்: 2318