ஹைதராபாத்: வங்கிக்கடன் பெறுவதில் கிரெடிட் ஸ்கோர் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் நிதியை எந்த அளவுக்கு திறம்பட கையாள்கிறோம் என்பதையே இந்த கிரெடிட் ஸ்கோர் காண்பிக்கிறது. உங்களிடம் அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால், வங்கிக்கடன் பெறுவது மிகவும் எளிதாகிவிடும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கிரெடிட் ஸ்கோரை எப்படி மேம்படுத்துவது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
- கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதற்கான அடிப்படை காரணி, கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவது தான். தாமதம் இல்லாமல் கடனைச் செலுத்த வேண்டும்.
- உங்கள் கிரெடிட் கார்டு வரம்பைக் கண்காணிக்க வேண்டும். அதில் 30 சதவீதத்திற்கு மேல் செலவிட வேண்டாம். காரணம், கிரெடிட் கார்டிலிருந்து அதிகமாகச் செலவழித்தால், நீங்கள் கடன்களை நம்பியிருக்கிறீர்கள் என்று நிதி நிறுவனங்கள் முடிவு செய்து, உங்களை டார்கெட் செய்யத் தொடங்கும்.
- பிணையில்லா கடன்களுக்குச்செல்வது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மோசமாகப் பாதிக்கும். ஒட்டுமொத்த கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க, சில சூரிட்டி அடிப்படையிலான கடன்களையும் எடுக்க வேண்டும். பிணை வழங்குவதால், நிதி நிறுவனங்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பிணை மற்றும் பிணை இல்லாத கடன்களை கலந்து எடுப்பது, கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதைக் குறைக்கும்.
- உங்கள் கிரெடிட் கார்டுகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். உங்களுக்குத் தெரியாமல் கடன்கள் வழங்கப்பட்டிருக்கலாம். உங்களுக்குத் தெரியாமல் நடக்கக்கூடிய மோசடியான பரிவர்த்தனைகள் காரணமாக, உங்கள் கிரெடிட் கார்டில் தவறான தகவல்கள் ஊடுருவக்கூடும். உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டில் தவறான தகவல்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக உங்கள் வங்கிகள் மற்றும் கிரெடிட் பீரோக்களை தொடர்பு கொண்டு அதை சரிசெய்ய வேண்டும்.
- கிரெடிட் ஸ்கோர் மற்றும் அதன் ரிப்போர்ட் குறித்து பல ஆதாரமற்ற கருத்துகள் உள்ளன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மட்டுமே இந்த கிரெடிட் ரிப்போர்ட்களை ஆய்வு செய்கின்றன என்று மக்கள் பொதுவாக நினைக்கிறார்கள். ஆனால், இன்ஸ்யூரன்ஸ் மற்றும் செல்போன் நிறுவனங்கள்கூட இந்த ரிப்போர்ட்களை சரிபார்க்கின்றன. சில நேரங்களில், நீங்கள் பணிக்கு சேரும் நிறுவனங்களின் நிர்வாகங்கள் கூட உங்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு கிரெடிட் ரிப்போர்ட்களை பார்ப்பார்கள்.
- உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்களை தவறாமல் சரிபார்ப்பது, நிதி நடத்தையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஆண்டுக்கு ஒருமுறை எந்தவொரு கிரெடிட் பீரோவிடமிருந்தும் கிரெடிட் ரிப்போர்ட்களை இலவசமாகப் பெறலாம்.
- உங்கள் வருமான விவரங்கள் கிரெடிட் ஸ்கோரில் பிரதிபலிக்காது, இது உங்கள் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளின் விவரங்களை மட்டுமே குறிக்கிறது. எனவே, கிரெடிட் ஸ்கோர் குறித்து பிறர் கூறும் வதந்திகளை நம்பாமல், கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலவரப்படி, வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளன. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால், உங்களுக்கு வட்டி விகிதம் சற்று குறையக்கூடும். இது உங்கள் கடன் தகுதியை அதிகரிக்கும்.