ஸ்ரீநகர்:ஜம்மூ-காஷ்மீரின் தோடா மாவட்டம் தாத்ரியில் நிலவெடிப்பு காரணமாக 15 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தளத்தில் 4 நாட்களுக்கு முன்பு விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அப்போது, உள்ளூர் மக்கள் நிலவெடிப்பு என்று யூகிக்கவில்லை. ஆனால், இன்று (பிப்ரவரி 3) 15 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த வெடிப்பு காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். இதுகுறித்து தோடாவின் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அதர் அமீன் சர்கார் கூறுகையில், "டிசம்பர் மாதம் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. கடந்த 2 நாள்களில் தீவிரமடைந்துள்ளன. நேற்று வரை 6 கட்டடங்களில் மட்டுமே விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று 9 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலவெடிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் குழு அமைத்துள்ளது. நேற்றிரவு முதலே புவியியலாளர்கள் குழுவினர் ஆய்வை தொடங்கிவிட்டனர். விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன்பின் நிலவெடிப்புக்கான காரணம் தெரிவிக்கப்படும். பொதுமக்கள் யாரும் பயப்படத்தேவையில்லை.
பலரை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளோம். அவர்களுக்கு தற்காலிக தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல விரிசல்கள் ஏற்படாவிட்டாலும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மற்ற சில வீடுகளையும் காலி செய்ய உத்தரவிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தரப்பில், விரிசல்கள் ஏற்பட்ட வீடுகளில் மீண்டும் வசிக்க அச்சமாக உள்ளது. மாற்று இடங்களை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். அதேபோல, எங்களது பாதுகாப்பு உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஜம்முவின் நர்வால் யார்டு டிரான்ஸ்போர்ட் நகரில் ஜனவரி 1ஆம் தேதி 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. முன்னதாகவே ஏற்பட்ட விரிசல்களை கண்ட மக்கள் உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், அடுத்தடுத்த விரிசல் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரிலும் நில வெடிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மொத்தமாக 723 கட்டடங்கள் பாதுகாப்பற்ற கட்டடங்களாக அடையாளம் காணப்பட்டன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என்று உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்தது. ஜனவரி 7ஆம் தேதிக்குப் பிறகு கட்டடங்களில் விரிசல்கள் ஏற்படவில்லை. அதற்கு முன்னதாக ஏற்பட்ட விரிசல்களும் விரிவடையவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் விரிசல்கள் ஏற்பட்ட கட்டடங்களுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் நிலவெடிப்பு தொடங்கியிருப்பது, ஜோஷிமத் மக்களிடையேவும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு